×

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.  கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என பேசியிருந்தார். மேலும் அவரது காலம் இருண்ட காலம் எனக் கூறியிருந்தார். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது என்ற குற்றசாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவானது, விசாரணைக்கு வந்தபோது, 19ம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜ ராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் ஆதாரப்பூர்வமாக வரலாற்று அடிப்படையிலேயே பேசியதாக கூறி, 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் குற்றவாளி தரப்பில் இருந்து புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டதால் நீதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் முன்ஜாமின் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வேண்டுமென்று கோரினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார். ஆனால், இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்துவிட்தால் ரஞ்சித் உடனடியாக கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியெழுந்துள்ளது.


Tags : Ranjith ,branch ,arrest ,Raja Raja Chola: High Court , Raja Raja Chola, Pa. Ranjith, Arrest, High Court Branch
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி