×

மழையில்லாமல் ஏரி, குளங்கள் வறண்டு விட்டதால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை: துரைமுருகன்

சென்னை: மழையில்லாமல் ஏரி, குளங்கள் வறண்டு விட்டதால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு ஒரு அரசு தேவையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. அத்துடன் நிலத்தடி நீரும் சில இடங்களில் வற்றியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் தமிழகத்திற்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்ப கேரளா முன்வந்தபோதும், தமிழக அரசு வேண்டாம் என்று மறுத்ததாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் கேரள அரசிடம் தண்ணீர் வேண்டாம் என தமிழக அரசு கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியதை, தமிழக அரசு வரவேற்றிருக்க வேண்டும். கேரள அரசு தருவதற்காக முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழக அரசு பெற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்டு.

அதேபோல் மத்திய அரசிடமிருந்து வறட்சி நிதியை தமிழக அரசு பெற்றிருக்க வேண்டும். ஆந்திர மாநிலத்திடமிருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அண்டை மாநில அரசுடன் தமிழக பொதுப்பணித்துறை பேசி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மழையில்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. ஆதலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே இதை தான் சொல்கிறார்கள். இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது? விரைவில் கூடவுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின்போது குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க திமுக நடவடிக்கை எடுக்க உள்ளது என்று கூறியுள்ளார்.



Tags : lake ,Duramurugan , Duramurugan, DMK, Tamil Nadu Government, Kerala, Water shortage
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!