2018-2021ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஐகோர்ட் கிளை

சென்னை: 2018-2021ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3 மாதம் அவகாசம் கூறியிருந்த நிலையில், ஒரு மாதம் அவகாசத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2018-21 ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என மதுரையை சேர்ந்த ஹிக்கிம் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்தது. ஆனால் 2018-2019ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக இதே மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கல்விக் கட்டண குழு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை, ஆன்-லைன் மற்றும் செய்தித் தாள்களில் வெளியிட உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தான் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஹக்கிம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி கட்டண விவரங்களை வெளியிட 3 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டனர்.

Tags : Government , Year 2018-2021, School fees, online, leisure, HC Branch
× RELATED 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில்...