தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை வருகிற 28ம் தேதி கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில்  சபாநாயகர் மீது திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும், தண்ணீர் பிரச்னை, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த  கூட்டத்தொடரில் திமுக சார்பில் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல்  14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால். பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைத்தது.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly, Official Review Meeting, AIADMK, DMK,
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...