×

புதிய கல்வி கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு: கோவையில் மாணவர் அமைப்பினர் போராட்டம்

கோவை: கோவையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதன் நகலை எரித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. தேசிய கல்விக் கொள்கை’ கடந்த 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே,  தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த  2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ  முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது. நீண்ட கால தாமதத்துக்குப் பின், அந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது.

அந்த புதிய வரைவு  கொள்கையை, புதிதாக பொறுப்பேற்ற மத்திய  மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். இந்த வரைவு திட்டம் குறித்து இம்மாதம் 30ம் தேதி வரை மக்கள்  தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை  தெரிவிக்கலாம் என கூறினார். இந்த சூழ்நிலையில் இந்த புதிய கல்வி கொள்கை என்பது தமிழகத்திற்கு ஒவ்வாமை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் வரைவு நகலை எரிக்கக்கூடிய ஒரு முயற்சியில் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே காலை 11.30 மணி அளவில் அவர்கள் இந்த போராட்டத்திற்காக ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த புதிய வரைவு கொள்கை என்பது ஒருபோதும் தமிழகத்திற்கு தேவையில்லை என்றும், இதனால் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். இருக்கக்கூடிய இருமொழி கொள்கையே போதுமானது என அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த நகலை எரிக்க முயன்ற போது அவலர்களை போலீசார் கைது செய்தனர்.


Tags : struggle , New Education Policy, Protest, Coimbatore, Student Organization, Struggle
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...