ராட்டினம் அறுந்து விழுந்த விபத்து: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை : ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தையடுத்து சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும், “ப்ரீ பால் டவர்” எனும் விளையாட்டும் உண்டு. நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் மத்தியில் இரும்பு தொட்டில் போல் ராட்டினம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் அமர்ந்தவுடன் மேலே சென்று, வேகமாக கீழே  இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  
 
தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. உயரமான பகுதியில் சென்றபோது இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். கீழ் பகுதியில் இருந்தபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராட்டின கயிறு அறுந்த காட்சிகளை அங்கு  சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பூங்காவை வருவாய் துறையினர் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே பூங்காவை இயக்க வேண்டும் என கூறப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை குயின்ஸ்லாண்டை மூடி வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Rotary crash ,amusement park ,Queensland , Rotunda, accident, Queensland amusement park, closure, police warrant
× RELATED அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?