×

கொடிவேரி பாசன விவகாரம் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம்: அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை

ஈரோடு: கொடிவேரி பாசன விவசாயிகளின் போராட்டத்திற்கு மொடக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரச்னையை அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலர் தூண்டிவிடுவதாக புகார் எழுந்துள்ளது. பெருந்துறை, சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பவானி ஆற்றில் கொடிவேரி அணைக்கட்டில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக சுமார் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து ஆற்றில் தரைமட்ட கிணறு அமைக்கும் பணி கடந்த சில நாளாக நடந்து வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கான தண்ணீர் அளவு குறைந்து பாசன நிலங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி இத்திட்டத்திற்கு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு நேற்று முன்தினம் கொடிவேரி அணைக்கட்டை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இத்திட்டம் பெருந்துறை தொகுதிக்கு செயல்படுத்தப்படுவதால் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்திற்கும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.  இதனால், இத்திட்டத்தை தடுக்க அமைச்சர் செங்கோட்டையன்ஆதரவாளர்கள் சிலர் விவசாயிகளை தூண்டுவதாக  புகார் எழுந்துள்ளது.

ஆனால், கொடிவேரி பாசன திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என தோப்பு வெங்கடாச்சலத்திற்கு ஆதரவாக மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணி தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளார். மேலும், பாசன விவசாயிகளின் போராட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எம்எல்ஏ சிவசுப்பிரமணி கூறியதாவது:

கொடிவேரி குடிநீர் திட்டம் மட்டுமல்ல மக்களுக்கான எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்த சிலர் இடையூறாக உள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடிவேரி குடிநீர் திட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் போராட்டம் நடத்துகின்றனர்.

விவசாயிகள் யாராவது குடிநீர் வேண்டாம் என சொல்வார்களா, குடிநீர் என்ற பெயரில் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியுமா என்பதை விவசாயிகள் சிந்திக்க பார்க்க வேண்டும். தொழிற்சாலை அல்லது தனிநபருக்கு தண்ணீர் எடுத்தால் திட்டத்தை தடுப்பதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் யாரும் அந்த தண்ணீரை குடிக்க மாட்டார்களா என்று தெரியவில்லை. சில விவசாயிகள் விளம்பர பிரியர்களாக மாறிவிட்டதால் இது போன்ற போராட்டங்களை செய்கின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வர முடியாது.

எனவே, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த இடையூறு செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்பிரமணி கூறினார். அவர் அமைச்சர் செங்கோட்டையன் பெயரை நேரடியாக சொல்லாமல் அவரின் ஆதரவாளர்கள் என்று கூறி விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Tags : strike ,supporters ,Sengottaiyan ,AIADMK MLA , Kodiveri, Irrigation Affairs, Senkottaiyan Supporters, Induction, Farmers, Struggle
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...