×

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 23.53 லட்சம் கையாடல் முன்னாள் பெண் கேஷியர் அதிரடி கைது

* மோசடி பணத்தில் ஆடம்பர திருமணம்
* மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய போலீஸ்

சென்னை: சென்னை ெமட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் உள்ளது. இந்த நிறுவனத்தில் வரவு செலவுகளை சரிபார்க்க ஒப்பந்த முறையில் உதவி கணக்காளராக செம்மஞ்சேரி காமராஜர் நகரை சேர்ந்த பர்கத்  பானு(24) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அவருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கட்டுமான கான்டிராக்டர்களுக்கு செய்த பணிக்கான பணம் வழங்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் பர்கத் பானுவுக்கு வசதியான இடத்தில் திருமணம் நிச்சயமானது. அதை தொடர்ந்து கடந்த 15.9.2018ம் ஆண்டு திருமணத்திற்காக தனது பணியை பர்கத் பானு ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.  இதற்கிடையே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் தாங்கள் வேலை செய்த பணிக்கான பணத்தை கேட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கடிதம் எழுதின. அப்போதுதான் பர்கத் பானு தில்லுமுல்லு செய்தது தெரியவந்தது. இதையடுத்து மெட்ரோ  ரயில் நிறுவனத்தில் இருந்து அவரது உறவினர் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் பறிமாற்றம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பர்கத் பானு பணிகாலத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட பணம் குறித்து கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய  ₹23,53,300 லட்சம் பணத்தை, பர்கத் பானு அவரது உறவினரான முகமது ஜனத் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி இருந்தது தெரியவந்தது.இதைடுத்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கணக்குகளை பராமரிக்கும் இணை பொது மேலாளர் பார்த்திபன் கடந்த மார்ச் 1ம் தேதி முன்னாள் உதவி கணக்காளர் பர்கத் பானு மீது ₹23,53,300 லட்சம் கையாடல் செய்ததாக கோயம்பேடு காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து  பர்கத் பானு தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க கோயம்பேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையின் நேற்று முன்தினம் செம்மஞ்சேரி காமராஜ் நகரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு பர்கத் பானு வந்தது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் அதிரடியாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிற்குள் இருந்த  பர்கத் பானுவை பிடித்தனர்.

பின்னர் பர்கத் பானுவிடம் போலீசார் கையாடல் செய்த பணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பர்கத் பானு, தனது திருமணம் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்ற ஆசையில் ஒப்பந்த நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ₹23.53  லட்சம் பணத்தை தனது உறவினர் முகமது ஜனத் வங்கி கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார்.அந்த பணத்தில்  கார் வாங்கியதுடன் பர்கத் பானு தனது திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ₹ 8 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதைதொடர்ந்து கோயம்பேடு போலீசார் மோசடி செய்த பர்கத் பானு மீது ஐபிசி 406,409,420,465,467,471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த மோசடியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உடன்பணியாற்றி வரும்  நபர்கள் யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த முகமது ஜனத்தை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆடம்பரமாக தனது திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையில் மோசடியில் ஈடுபட்டு இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட  சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பர்கத் பானு தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருடிய பணத்தில்  கார் வாங்கியதுடன் பர்கத் பானு தனது திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தினார்

Tags : Chennai Metro Rail , 23.53 lakhs,Chennai ,Metro Rail, Former Woman ,Cashier ,arrested
× RELATED மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர்...