அபாயகரமான விஷவாயுவை வெளியேற்றும் ஒரே நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மட்டும்தான்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

சென்னை: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த  வழக்கின் இறுதி வாதங்களுக்காக ஜூன் 27ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷாம்பூ கலோலிகரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வேதாந்தா  நிறுவனம் 2018 ஜனவரி 31ல் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை புதிப்பிக்கக்கோரி ஆலை தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆலையை நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என்று 2018 ஏப்ரலில் தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 இதைதொடர்ந்து ஆலையை மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2018 மே 28ம் தேதி ஆலையை நிரந்தரமாக  மூடுவதற்கு அரசு கொள்கை முடிவெடுத்தது. அதன்படி ஆலை மூடப்பட்டது. இந்த  கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. தொடர்ந்து நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாசுபடுத்திய காரணத்தினாலேயே ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ. 100 கோடி  அபராதம் விதித்தது. அந்த தொகையை தூத்துக்குடி பகுதி  மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசினால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஈட்டிய லாபத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய மாசுவை  அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தமுள்ள 60 தொழிற்சாலைகளில் 51 தொழிற்சாலைகள் இயங்குகிறது. அவற்றில் 33 ஆலைகள் எந்த கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18 தொழிற்சாலைகளில் 4 ஸ்டெர்லைட் யூனிட்டுகள்  காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. மீதமுள்ள 14ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகி விடுகின்றன.
 தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே.

 ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்துள்ளது. ஆலை கழிவுகளால் தண்ணீர் குடிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளது. அதேநேரம், ஆலை மூடப்பட்ட பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டுள்ளது. நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆலை தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது. மூன்றாயிரம் கோடி ரூபாய் மூலதன செலவுடன் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு தலா ரூ. 2 ஆயிரம் கோடி லாபம்  ஈட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை  அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tuticorin Sterlite ,Tamil Nadu , hazardous toxins, Tuticorin, Sterlite , High Court
× RELATED காஸ் சிலிண்டர் விலை 18 உயர்வு