×

பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியிடம் 7 லட்சம் நகை கொள்ளை: செவிலியருக்கு போலீஸ் வலை

சென்னை: பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியிடம் 7 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற செவிலியரை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா (65), தொழிலதிபரின் மனைவியான இவர், வயது மூப்பு காரணமாக கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இவர், 10 நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என்று, டாக்டர் பரிந்துரை செய்திருந்தார். இதனால், ஏஜென்சி மூலம் 10 நாட்களுக்கு பிசியோதெரபி அளிக்க சவுமியா (27) என்ற செவிலியரை நியமிக்கப்பட்டார்.அதன்படி, செவிலியர் சவுமியா கடந்த ஒரு வாரமாக மூதாட்டி ராதா வீட்டிற்கு சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்தார். வழக்கம்போல், நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த செவிலியர் சவுமியா, மூதாட்டிக்கு சிகிச்சையளித்தார்.

அப்போது, மூதாட்டி அணிந்து இருந்த 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார். பின்னர், உடல் முழுவதும் எண்ணெய் தடவி கை, கால்களை மசாஜ் செய்துள்ளார். பிறகு மூதாட்டி குளிக்க சென்று விட்டார். மூதாட்டி குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது சிகிச்சை அளித்த செவிலியர் மாயமாகி இருந்தார். பிறகு துணிகளை எடுக்க மூதாட்டி பீரோவை திறந்த போது, அதில் வைத்திருந்த 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து மூதாட்டி ராதா உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது செவிலியர் சவுமியா ஒருவித பதற்றத்துடன் வீட்டில் இருந்து வேகமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. செவிலியரை பணிக்கு அனுப்பிய ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர்களிடம் சவுமியா குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : businessman , Physiotherapy treatment, businessman's wife, jewelry robbery
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்