×

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு ஆய்வு செய்து நடவடிக்கை: கலெக்டர், மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, புதிதாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை செம்பியம் திரு.வி.க.நகரை சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர், பெரியார் நகர், கொளத்தூர் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஏராளமான வழிபாட்டு தலங்களும் உள்ளன. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. ஏற்கனவே 70 அடியாக இருந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 40 அடியாக குறைந்துவிட்டது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை 70 அடியாக விரிவாக்கம் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2012ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மீது வில்லியம் மோசஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, பேப்பர் மில்ஸ் சாலையின் இருபுறமும் உள்ள இடங்களை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பூர் மற்றும் அயனாவரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் டி.எஸ்.ராஜமோகன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்  என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா குறித்து ஆய்வு செய்யுமாறு இந்த நீதிமன்றம் ஏப்ரல் 26ம் தேதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் சரியாக அமல்படுத்தவில்லை. மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத்  வாதிடும்போது பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பே இல்லை என்றும் அவை பட்டா இடங்கள் என்றும் தெரிவித்துள்ளார். போலி பட்டா என்ற விஷயத்தை மிக எளிதில் விட்டுவிட முடியாது. இது முக்கியமான பிரச்னை. வழக்கு விசாரணையின்போது சென்னை மத்திய மண்டல துணை ஆணையர் ஸ்ரீதர் ஆஜராகியிருந்தார். அவர் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை உரிய முறையில் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா போன்றவற்றை கண்டுபிடித்து உண்மையைக் கொண்டு வர புதிதாக ஆய்வு நடத்த ஒரு நாளை மாநகராட்சி தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆய்வில் மாநகராட்சி, வருவாய்துறை அதிகாரிகள், மனுதாரர் மற்றும் அவரது வக்கீல் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும்.  மாநகராட்சி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தும்போது போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை அணுகலாம். இந்த நீதிமன்றமும் பாதுகாப்பு தர உத்தரவு பிறப்பிக்கும். இந்த ஆய்வில் சென்னை கலெக்டரும் பங்கேற்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 5ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,Supreme Court ,Municipality , Perambur Paper Mills Road, Collector, Corporation, High Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...