×

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அவசியமற்றது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி

பெங்களூரு: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது வாக்குப் பதிவு சமயத்தில் இரு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கும்போது, வாக்காளர்கள் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இது அவசியமில்லாத ஒன்று என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா கூறினார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் குமாரசாமி நாளை (இன்று) முதல் வித்யாசமான முறையில் கிராம தரிசனம் நடத்துகிறார். தமிழக முதல்வராக காமராசர் இருந்தபோது, மக்களுக்கு சிறப்பாக சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகளுடன் சென்று மக்களை சந்தித்தார். அதே பாணியில் குமாரசாமி கிராம தரிசனம் நடத்துகிறார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.

மேலும் கிராம தரிசனம் நடத்தும்போது கட்சி பேதமில்லாமல் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் உள்ள தொகுதியிலும் கிராம தரிசனம் நடத்த வேண்டும் என்று குமாரசாமிக்கு அறிவுறுத்தியுள்ளேன். கடந்த வாரம் நான் டெல்லி சென்றபோது ராகுல்காந்தியை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். அதேபோல் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி தலைவர்களை பேசும்படி அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

நாட்டில் ஸ்திரத்தன்மையை காப்பாற்றவும், தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் முன்வைத்து, இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை தேசிய கட்சிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், மாநில கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் வாக்கு பதிவு சமயத்தில் மக்களவைக்கு ஒன்றும், பேரவைக்கு ஒன்றும் என்ற வகையில் இரு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கும்போது, வாக்காளர்கள் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இது அவசியமில்லாத ஒன்று. இவ்வாறு தேவகவுடா கூறினார்.


Tags : country ,election ,voters ,Devakauda , It's one country, same election model, not necessary, confusion, former prime minister, Devakauda
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!