×

9.2 டிஎம்சி நீரை உடனே திறந்து விட முடியாது தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்தது கர்நாடக அரசு: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காரசாரம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்த மாதத்திற்கான 9.2 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விடக்கோரி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக பிரதிநிதிகள் தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மறுத்துவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜூ, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தின் போது காவிரியின் இருந்து இதுவரை திறக்கப்பட்ட நீரின் அளவு, அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் குறிப்பாக தமிழகத்திற்கு ஜூன் மாத ஒதுக்கீட்டு நீரான 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்த விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், கர்நாடகா தாமதம் செய்து வருகிறது. இது உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறும் செயலாகும். இதைத்தவிர மாநிலத்தில் நிலவும் அதிகப்படியான வெயிலால் மேட்டூர் அணை நீர்மட்டமும் மிகவும் குறைந்து விட்டது. அது குடிநீருக்கே போதுமானதாக இல்லை என தமிழக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு தரப்பு வாதத்தில்,”எங்களது மாநிலத்தை பொருத்தமட்டில் இந்த மாத ஆரம்பத்தில் பருவ மழை இருந்தது. இதையடுத்து தான் தமிழகத்திற்கு முதல் வாரத்தில் 1.75 டி.எம்.சி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் பின்னர் படிப்படியாக மழையின் அளவு தற்போது குறைந்து விட்டது. அதனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விடும் விவகாரத்தில் கர்நாடகா மாநிலத்தின் பருவ மழையின் அளவை அடிப்படையாக கொண்டு தான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தின் முடிவில் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆலோசனைக் கூட்டத்தில் காவேரி அணையின் நீர் இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு 1.72 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து திறந்து விட்டுள்ளது.

இதில் தற்போது கர்நாடக அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இது குறித்த அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திடம் அறிக்கையாக கொடுக்க உள்ளோம். இதையடுத்து வருகிற 25ம் தேதி நடைபெற இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது சம்பந்தமாக முழுமையாக ஆலோசிக்கப்படும் என  அவர் கூறினார்.

Tags : Karnataka ,government , 9.2 TMC Water, Open, Cannot, Government of Tamil Nadu
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...