சிவகங்கை அருகே 18ம் நூற்றாண்டு வீரனின் நடுகல் சிலை கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே பில்லூரில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், பில்லூரில் அழுபிள்ளைதாங்கி என்ற இடத்தில் 18ம் நூற்றாண்டு நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கூறியதாவது:

சிவகங்கை அருகே பில்லூரை அடுத்த அழுபிள்ளைதாங்கி என்ற குடியிருப்பு பகுதியை ஒட்டிய காட்டுப்பகுதியில், 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த வீரனின் நடுகல் சிலையை கண்டறிந்துள்ளோம். போரில் இறந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும். போர் வீரன், போர்ப்படை தளபதி, எதிரி நாட்டின் வீரர்களை கூடுதலாக அழித்து, மாண்டுபோன வீரன் என யாரின் நினைவாக நடுகல் நடப்படுகிறதோ, அதை குறிப்பிடும் குறியீடுகளுடன் நடுகல் நடப்படும். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் வீரன் சிலை அமைப்பு, கையில் வில் அம்பு ஏந்திய நிலையில் ஒரு கை வில் தண்டையும், மறு கை நாணில் அம்பேற்றிய நிலையிலும் உள்ளது.

வீரனின் முதுகுப்பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் உள்ளது. இடுப்பிலிருந்து முழங்காலுக்கு ஆடையும், கையில் வீரக்கழலும், காதில் காதணியும் காணப்படுகிறது. தலை முடி கொண்டையாக கட்டப்பட்டுள்ளது. வீரனின் இடதுகால் அருகே சிறிய உருவம் ஒன்று காணப்படுகிறது. தலைமுடி கொண்டையிட்டு கைகள் கூப்பிய நிலையில் உள்ளன.

இவைகளை பார்க்கும்போது பெரிய உருவம் படைத்தளபதியாகவும், சிறிய உருவம் படை வீரனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சிலையின் மேல், ‘முத்தணன்’ என பெயர் எழுதப்பட்டுள்ளது. இச்சிலையை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : warrior ,Sivaganga , Sivaganga, 18th Century, Hero, Nadugal statue, invention
× RELATED முரசொலி மீது சுமத்தப்பட்ட...