பருவகாலங்களில்தான் பெய்யும் பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் மழையை பொழிய வைக்க முடியாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டுபிடிப்பு

விருதுநகர்: பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் மழையை பொழிய வைக்க முடியாது. பருவகாலங்களில்தான் மழை பெய்யும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் களப்பணியாளர்களுக்கான குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்.ஆர்.நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் பஞ்சாயத்து  தலைவர்கள் இல்லை. அதனால் பஞ்சாயத்து செயலாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. இவர்கள், மக்களிடம் ஓட்டுக்கேட்டு போகப்போவதில்லை. அதனால்தான் மெத்தனமாக உள்ளனர். தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய சிறந்த திட்டங்கள் அரசிடம் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைபடுத்த வேண்டிய ஊராட்சி செயலாளர்கள் மெத்தனமாக செயல்படுவதே பிரச்னைக்கு காரணம். பொறுப்பு அறிந்து ஊராட்சி செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தண்ணீர் பிரச்னை காரணமாக தனியார் பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது தவறு. மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாக கூறித்தான் தனியார் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி பள்ளியை மூடப்போவதாக தனியார் பள்ளிகள் அரசை மிரட்டக் கூடாது.

மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பொழிய வைக்க முடியாது. அது  பருவகாலங்களில் தான் பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தள்ளி போயிருக்கிறது. ஜூன் 30க்கு பிறகு மழை பெய்யும் என கூறியுள்ளனர். முதல்வர் பல் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு, ஒரு தேர்தல் பற்றி முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Rajendra Balaji ,season , Only in the seasons, Prime Minister, Prime Minister, Rain, Minister Rajendrapalaji
× RELATED வங்கி வாடிக்கையாளர் உள்பட 40...