×

வேலூர் அடுக்குமாடி வீட்டில் சோதனை மூட்டைமூட்டையாக 4 டன் குட்கா சிக்கியது: சென்னை போலீஸ் அதிரடி

வேலூர்: சென்னை ஓசிஐயூ போலீசார் வேலூரில் நடத்திய அதிரடி சோதனையில், அடுக்குமாடி வீட்டில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 4 டன் குட்கா மற்றும் கெமிக்கல் சிக்கியது. சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு (ஓசிஐயூ) போலீசாருக்கு, வேலூரில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை வேலூருக்கு ரகசியமாக வந்தனர்.

வேலூர் சைதாப்பேட்டை பிடிசி சாலையில் முகமதுபேக் பங்களா தெருவில் உள்ள முகமது இப்ராஹிம்(37) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, மொட்டை மாடியில் உள்ள அறையில் 70 மூட்டைகள் இருந்தது.

அதனை பிரித்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், போதை பொருள் பாக்கெட்டுகள் மற்றும் அதனை தயாரிப்பதற்கான கெமிக்கல், பவுடர் போன்றவை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலை 9 மணியளவில் வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இதில் பல ஆண்டுகளாக அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, மினி கம்பெனி போல் இயங்கியதும், போதை பொருள் பாக்கெட்டுகள் தயாரித்ததும் அம்பலமானது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் இப்ராஹிம்(37), அதே பகுதியை சேர்ந்த அப்சல்பாஷா(28) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுமார் 4 டன் புகையிலை பொருட்கள், 28 லிட்டர் கெமிக்கல், பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்களை யாரிடமிருந்து வாங்கினார்கள், எங்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? முக்கிய புள்ளிகள் யார்? யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : apartment building ,Vellore ,Chennai Police Action , Vellore, apartment, raid, 4 ton gutka, trapped, Chennai police
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...