×

கட்சியின் அடுத்த தலைவர் யார்? காங்கிரஸ் தலைவர் ராகுல் பதில்

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்’’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் செயற்குழு அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்ததுடன், கட்சியை மறுசீரமைப்பு செய்ய அவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியது.

ஆனாலும் அவர் பதவி விலகுவது என்ற முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் அடுத்த தலைவர் யார் என நேற்று செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், `‘கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. அதை கட்சிதான் முடிவு செய்யும்’ என்றார்.

மேலும் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘‘விரைவில் ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்’’ என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல், ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்ற எனது கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இந்த ஊழல் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் சார்பில் மத்திய விஜிலென்ஸ் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் மனு கொடுத்துள்ளோம்’’ என்றார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : party ,Rahul ,Congress , Party, next leader, Congress leader, Rahul
× RELATED அரசு தயார்நிலை: ராகுல் கிண்டல்