×

பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருக்கிறது பாகிஸ்தான் வெளியிட்ட தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என மத்திய அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் டிரிபூன் என்ற பத்திரிக்கை நேற்று ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. அதில், ‘இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், பிராந்திய நலனுக்காக பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளுடனும் சுமூக உறவை வைத்துக் கொள்வதற்கு முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலமாக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள இந்த செய்தியில் உண்மையில்லை என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி ஆகியோர், மீண்டும் பதவியேற்ற பிரதமர் மோடி மற்றும் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையே பின்பற்றப்படும் நடைமுறை அடிப்படையில் அவர்களது வாழ்த்துக்களுக்கு பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். அவர்களது செய்தியில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் ஒழுங்கான மற்றும் ஒத்துழைப்பான உறவை பராமரிக்க இந்தியா முற்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி தனது செய்தியில், “நம்பிக்கையின் சூழலை கட்டமைப்பதற்கு தீவிரவாதம் இல்லாத, வன்முறையற்ற மற்றும் விரோதமில்லா போக்கை கடைபிடிப்பது அவசியமாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோல், ‘‘வெளியுறவுத் துறை அமைச்சர் தீவிரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியமாகும்’’ என்று தனது பதில் செய்தியில் கூறியிருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்தவித கருத்தையும் பிரதமர் மோடியோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ குறிப்பிடவில்லை. பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,talks , Negotiations, India, Pakistan, Central Government, Denial
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...