உலக கோப்பையில் இன்று இங்கிலாந்தை சமாளிக்குமா இலங்கை

லீட்ஸ்: மழை காரணமாக புள்ளிகளை பெற்ற அணியாக உள்ள இலங்கை அணி இன்றைய போட்டியில் அதிரடி அணி இங்கிலாந்தை எதிர்க்க உள்ளது. உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி லீட்ஸ் நகரில் இன்று  நடைபெறுகிறது. ஒருநாள் போட்டியில் இந்த 2 அணிகளும் இதுவரை 74 முறை விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து 36முறையும், இலங்கை 35முறையும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன.  ஒரு போட்டி சரிநிகர் சமமாக முடிந்துள்ளது. மீதி 2போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இப்படி ஒரு வெற்றி வித்தியாசத்தில்  இங்கிலாந்து முன்னணியில் இருப்பது உலக கோப்பை தொடர்களிலும் தொடர்கிறது.  உலக கோப்பை தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 5முறையும், இலங்கை 4 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.  அதிலும் 2007, 2011, 2015 என கடந்த 3 உலக கோப்பைகளிலும் இலங்கையே வென்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்த 3 போட்டிகளை இங்கிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.  கடைசிப் போட்டி மட்டும் இலங்கை வசமானது.
ஆனால் இந்த உலக கோப்பையில் இலங்கையின் ஆட்டம்  சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் மழை கை கொடுக்க, டக்வொர்த் லீவிஸ் விதிமுறை உதவ, ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடனான ஆட்டத்திலும் மழை களமிறங்கியது. அதனால் போட்டிகள் கைவிடப்பட்டன. அவற்றில் தலா ஒரு புள்ளி என இலங்கைக்கு   2 புள்ளிகள் கிடைத்தன.  ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மழை கை கொடுக்காததால் 87ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்றது.  இதுவரை  5 போட்டிகளில் விளையாடிய இலங்கை  ஒரு வெற்றி,  2 தோல்வி,  2  கைவிடப்பட்ட ஆட்டம் என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஆனால் இங்கிலாந்து வெற்றியுடன்  தொடங்கியது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 104ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அடுத்த பாகிஸ்தானிடம் 14 ரன்களில் தோற்றது. மீண்டும் சுதாரித்த இங்கிலாந்து 3வது ேபாட்டியில் வங்கதேசத்தை 106ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. அதனால் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன்  8 புள்ளிகளை ஈட்டியுள்ளது. இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேகம் இங்கிலாந்து அணியிடம் உள்ளது. அதன் கேப்டன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் பலரும் அதிரடியாக ஆடி வருகின்றனர். இலங்கை அணியில் அந்த அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இதுவரை மழை மட்டுமே அவர்களுக்கு கை கொடுத்துள்ளது. எனவே ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இங்கிலாந்தின் இன்னொரு வெற்றி தடைபடும்.

மழை வருமா?
லீட்ஸ் நகரில் இன்று(வெள்ளிக்கிழமை) சூரியன் கோலோச்சுமாம். அவ்வப்போது லேசான மேக மூட்டம் சூரியனை மறைக்கலாம். ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்கிறது இங்கிலாந்து வானிலை அறிக்கை.

இங்கிலாந்து
இயான் மோர்கன் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), லயம் டாவ்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மார்க் வுட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், லயம் பிளங்க்கெட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

இலங்கை
திமத் கருணரத்னே (கேப்டன்), சுரங்கா லக்மல், இசுரு உடனா, லசித் மலிங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, லாகிரு திரிமன்னே, ஜெப்ரி வாண்டர்சே, மிலிண்டா ஸ்ரீவர்தனா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா.

Tags : Sri Lanka ,England ,World Cup , World Cup, England, Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல்