ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு அடுத்த தலைவலி தெலுங்கு தேசம் எம்பிக்கள் 4 பேர் பாஜ.விற்கு தாவல்: துணை ஜனாதிபதியை சந்தித்து கடிதம் வழங்கினர்

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை எம்பிக்கள் பாஜவில் இணைந்தனர். தங்களை பாஜ உறுப்பினர்களாக கருத வேண்டும் என மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து கடிதம் வழங்கினர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்த என்.டி.ராமராவ் கடந்த 1983ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தார்.

கட்சி ஆரம்பித்த 8 மாதங்களில் ஆட்சியை கைப்பற்றினார். இந்நிலையில், என்.டி.ராமராவ் மருமகனான சந்திரபாபு நாயுடு, தனது ஆதரவாளர்கள் மூலமாக தெலுங்கு தேசம் கட்சியை தனது பக்கம் இழுத்துக் கொண்டார். அவர் இறந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியை முழுவதுமாக கைப்பற்றினார். ஆந்திர மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார்.

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. 23 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் மட்டும் வெற்றி பெற்றனர். இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சந்திரபாபு நாயுடு அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. 5 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், மாநிலங்களவையில் 6 எம்பிக்கள் உள்ளனர். இதில் கரிக்க பாட்டி மோகன்ராவ், டி.ஜி.வெங்கடேஷ், சி.எம்.ரமேஷ், சுஜினா சவுத்ரி ஆகிய 4 எம்பிக்கள் நேற்று, டெல்லியில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து, தங்களை தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களாக கருதாமல், பாஜ உறுப்பினர்களாக கருதவேண்டும் என கடிதம் வழங்கினர்.

அப்போது பாஜ தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உடனிருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 4 எம்பிக்கள் நேற்று, டெல்லியில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து, தங்களை தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களாக கருதாமல், பாஜ உறுப்பினர்களாக கருதவேண்டும் என கடிதம் வழங்கினர்

தைரியத்தை இழக்கக்கூடாது:
சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு போன் செய்து நடைபெறக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை கேட்டறிந்து வருகிறார். கட்சி தொண்டர்கள் எக்காரணத்தை கொண்டும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மனம் தளரக்கூடாது. எப்போதும் தைரியத்தை விடக்கூடாது. 1983ம் ஆண்டு முதல் பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளை சந்தித்து உள்ளேன்.

பி.வி.நரசிம்மராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து  கொண்டதை  பார்த்துள்ளேன். எனவே கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்கள் தைரியத்தை மட்டும் விட்டுக் கொடுக்க கூடாது. மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி வலுவான கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்து ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : MPs ,Telugu Desam ,Andhra Pradesh ,BJP , Andhra, Chandrababu, Next Headache, Telugu Desam MPs, Tab for BJP, Vice President, Letter
× RELATED ஏமாற்றுவதையே கொள்கையாக...