×

டீசல் பயன்பாடு, கரும்புகைக்கு படிப்படியாக ‘குட்-பை’ மதுரை, திண்டுக்கல்லில் விரைவில் மின் பேட்டரி அரசு பஸ் இயக்கம்: தயார்நிலையில் 150 பஸ்கள்

மதுரை: காற்று மாசுக்கு படிப்படியாக ‘குட்-பை’ சொல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் மதுரைக்கு 100, திண்டுக்கல்லுக்கு 50 மின்சார பேட்டரி பஸ்கள் தயாராகி விரைவில் இயக்கப்பட உள்ளது. தமிழக அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டு பெரும் சோதனையில் சிக்கி தவிக்கின்றன. இதற்கு டீசல் விலை அதிகரிப்பும் காரணமாகும்.  ஏராளமான பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு ஆயுளை தாண்டி, காலாவதியான பிறகும் ஓட்டப்படுவதால், அதிக புகை கக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

டீசல் பயன்பாடால் ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் கரும்புகைக்கு படிப்படியாக ‘குட்-பை’ சொல்லும் வகையில், தமிழக அரசு புது முடிவு மேற்கொண்டுள்ளது. இதற்காக அரசு பஸ் போக்குவரத்து கழகங்களில் மின்சார பேட்டரி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்பேட்டரி பஸ்களும், திண்டுக்கலுக்கு 50 மின் பேட்டரி அரசு பஸ்களும் ஒதுக்கப்பட்டு தயாராகி உள்ளன.

இந்த பஸ்கள் விரைவில் இங்கு கொண்டு வரப்பட்டு, மதுரை, திண்டுக்கல் மற்றும் இந்த மாவட்டங்களிலும் சிட்டி பஸ்களாக இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன. இந்த பஸ்களில் மின்சார பேட்டரி பஸ்சின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். டெப்போக்களில் சார்ஜ் ஏற்ற வசதி செய்யப்படும். 2 மணிநேரம் பேட்டரியில் சார்ஜ் ஏற்றினால், 150 முதல் 170 கிமீ தூரம் பஸ் ஓடும். இரைச்சலோ, புகை வெளியேற்றமோ இருக்காது. ஒரு பஸ்சில் 46 பயணிகள் அமரும் இருக்கைகளும், 40 பேர் நின்று செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வை கணக்கிட்டு பார்க்கும்போது சார்ஜ் ஏற்றுவதால் ஏற்படும் மின் கட்டணம் மிக குறைவாக த்தான் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிதாக இயக்கப்பட இருக்கும் மின்பேட்டரி பஸ்களில் பயணிகளை கவருவதற்காக கட்டணத்தை குறைத்து வசூலை அதிகரிக்க செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் மட்டத்தில் யோசனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அரசு அனுமதி அளித்தால் கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Diesel usage, when good-bye, Madurai, Dindigul, soon, electric battery government bus, mobility
× RELATED யானை தாக்கி விவசாயி பலி