×

சீருடைப்பணியாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மாமூல் வாங்கும் போலீசார் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை: வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவு

மதுரை: மாமூல் வாங்கும் போலீசார் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, தேவையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த  உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் நகர் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமசாமி,  கடந்த 2011ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாமூல் வாங்கியதாக தன் மீதுள்ள குற்றச்சாட்டு காரணமாக பதவி உயர்வு பாதிக்கிறது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘மாமூல் வசூலித்த விவகாரத்தில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இந்த தண்டனையால் மனுதாரருக்கு டிஎஸ்பி பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது’ என கூறப்பட்டது.

நீதிபதி அளித்த உத்தரவு:
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி மீதே மாமூல் குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. சீருடைப்பணி என்பது சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் உன்னதமான பணி. ஆனால், அதிகாரிகள் மாமூல் கேட்பது மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலையில் எப்படி போலீசை தங்களின் நண்பனாக மக்கள் பார்ப்பர்?

நெடுஞ்சாலைகளிலும், டாஸ்மாக் கடை பகுதியிலும் அதிகளவில் மாமூல் வசூலிக்கப்படுகிறது. மீன் கடை, கறிக்கடை, காய்கறி கடைகளில் இலவசமாக பொருட்களை வாங்குகின்றனர். மாமூல் வசூலிப்பதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த நீதிமன்றம் சீருடைப் பணியாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கிறது. மாமூல் கேட்கும் விவகாரத்தில் போதிய முகாந்திரம் இருந்தாலே லஞ்ச ஒழிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

குற்றவியல் சட்டப்படி இதுவரை போதுமான நடவடிக்கை இல்லை. பல அரசுத்துறை பொது ஊழியர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். லஞ்சம் வாங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. பல வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.ஏழை மக்களின் வரிப்பணத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுகின்றனர்.

அரசின் வளர்ச்சி திட்டங்களை ஊழலின்றி நடைமுறைப்படுத்த முடியவில்லை. மனுதாரர் ஓய்வு பெற்று பென்ஷன் பெறுகிறார். எனவே, அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. லஞ்சம் கேட்போர் மற்றும் வாங்குவோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டப்படி குற்ற வழக்கு பதிவு செய்வது குறித்து தேவையான வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும்.

வழக்கு பதிவு செய்ய மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்தவும், கடைகளில் இலவசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்த வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Tags : policemen ,government , Uniformed, red alert, mamool, police, criminal, legal, action
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்