×

தேர்தல் செலவு கடனை தராமல் தஞ்சை மநீம வேட்பாளர் ஓட்டம்? பாதிக்கப்பட்டவர்கள் கட்சி மேலிடத்தில் புகார்

தஞ்சை: தேர்தல் செலவு கடனை தராமல் தஞ்சை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, முதன்முறையாக தேர்தல் களத்தில் குதித்தது. தஞ்சை தொகுதி வேட்பாளராக சம்பத் ராமதாஸ் போட்டியிட்டார்.

இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். தேர்தலுக்காக இவர் தஞ்சையில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். தேர்தலுக்காக துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார். பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தார். மேலும் ஓட்டல் மற்றும் ஒலிபெருக்கி, வேன் மற்றும் அச்சகம் என பல இடங்களில் தேவையான பணம் தருவதாக கூறி தேர்தல் பணிகளை செய்திருந்தார்.

தேர்தல் முடிந்ததும் அவர் பலருக்கு காசோலைகள் கொடுத்துள்ளார். அந்த காசோலைகளில் பெரும்பாலானவை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாம். ரூ.5 லட்சத்துக்கு இப்படி பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள், சம்பத் ராமதாசிடம் கேட்டுள்ளனர். அவர் சில நாட்களில் தருகிறேன் என்று சாக்குபோக்கு கூறியுள்ளார்.

ஆனால் 2 மாதமாகியும் பணம் வந்து சேராததால் பாதிக்கப்பட்டவர்கள், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மூலம் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்ய ஊடக தொடர்பாளர் மகாலட்சுமியிடம் புகார் செய்துள்ளனர். இதற்கு அவர், எங்கள் கவனத்துக்கு இந்த புகார் வந்துள்ளது. விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினாராம். எனினும் சிலர், தஞ்சை போலீசில் புகார் செய்துள்ளனர். இதையறிந்த வேட்பாளர், சம்பந்தப்பட்ட சிலரை சந்தித்து புகாரை வாபஸ் வாங்க வைத்து விட்டார். இதுகுறித்து சம்பத் ராமதாசிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

Tags : candidate ,Manima ,Victims , Election Spending, Debt, Asylum, Minimum Candidate, Flow? Report
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...