×

சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது

* சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வருகிறது * தண்ணீர், நீட் உள்ளிட்ட பிரச்னை எழுப்ப திமுக திட்டம்

சென்னை: தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை வருகிற 28ம் தேதி கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில்  சபாநாயகர் மீது திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும், தண்ணீர் பிரச்னை, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்த  கூட்டத்தொடரில் திமுக சார்பில் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல்  14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால். பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைத்தது. தற்போது தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதியில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன்  கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோன்று 22  சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் தமிழக சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை ஜூன் மாதம் 28ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு தலைமைசெயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.28ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், மறைந்த சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி பேரவை கூட்டம் தொடங்கி, ஜூலை மாதம் இறுதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்து திமுக சார்பில் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நீதிமன்றம் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.மேலும், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகிய மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டு, சபாநாயகர் தனபால் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமாக மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு கடந்த மே மாதம் 1ம் தேதி கடிதம் கொடுத்தார். பேரவை தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழிந்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் அந்த தீர்மானம் கட்டாயம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தீர்மானத்துக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால், தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக சட்டமன்ற கூட்டம் தொடங்கி 7 நாட்களுக்குள் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அதனால் ஜூலை 4ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில், சபாநாயகர் தனபால் மீது திமுக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரும் ஒரு தீர்மானம் வெற்றி பெற்றால் அதிமுக அரசு கவிழும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது சட்டப்பேரவையில் திமுக பலம் 100ஆகவும், அதன் கூட்டணி பலம் 109ஆகவும் உள்ளது. அதிமுக பலம் சபாநாயகரையும் சேர்த்து 122ஆக இருந்தாலும், டிடிவி தினகரன் ஆதரவு, கூட்டணி கட்சியினர் என 7 எம்எல்ஏக்களுக்கு மேற்பட்டவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். மேலும், சபாநாயகர் தனபால் மீது தற்போது 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில், இந்த தீர்மானம் வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் ஆபத்து அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளது.

24ம் தேதி அமைச்சரவை கூட்டம்
தமிழக சட்டமன்ற கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 24ம் ேததி (திங்கள்) தலைமை  செயலகத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற தொடரில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்படும். கவர்னர் அனுமதியின் பேரில் அந்த சட்ட மசோதா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். அதேபோன்று, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டமும் 24ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. இந்த  கூட்டத்தில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த துறை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்தும் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

தனபால் மீது 2வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் முதல்வர் எடப்பாடி தலைமையிலான கடந்த 28 மாத கால ஆட்சியில், சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இது 2வது முறையாகும்.முதல் முறையாக கடந்த 2017 மார்ச் 23ம் தேதி, ஆளும்கட்சிக்கு ஆதுரவாக செயல்படுவதாக எதிர்கட்சியினர் (திமுக) சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.  அரசின் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தும், சபாநாயகர் எண்ணி கணிக்கும் முறையை கடைபிடித்தார்.அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சேர்ந்த 97 உறுப்பினர்களும், எதிராக 122 ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும்  வாக்களித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. முதல் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 பேர் வாக்கெடுப்பில்  பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இரண்டாவது முறையாக  கடந்த ஏப்ரல் 30ம் தேதி,  தினகரன் அணியை சேர்ந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால்  சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11  பேருக்கு சபாநாயகருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று திமுக கேள்வி எழுப்பியது. மேலும் சபாநாயகர் நடுநிலையில் நம்பிக்கையில்லை என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்மொழிந்தார்.இந்த தீர்மானம் வரும் ஜூன் 28ம் தேதி  தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஆனால் முதன்முறை கொண்டு வந்த தீர்மானம் சபாநாயகருக்கு சாதகமாக இருந்தாலும், வரும் தீர்மானம் திமுகவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : session , legislative , meets , 28th
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...