×

‘எங்களுக்கு தேவை இல்லை’ கேரள தண்ணீரை மறுத்தது தமிழக அரசு

திருவனந்தபுரம்: கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் தமிழகத்திற்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்ப கேரளா முன்வந்தபோதும், தமிழக அரசு வேண்டாம் என்று மறுத்ததாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. சென்னையில் உச்சக்கட்ட அளவில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வீடுகளில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் கஷ்டம் வார்த்தைகளில் வடிக்க முடியாது.இதை பத்திரிகைகளில் படித்த கேரள முதல்வர் பினராய் விஜயன், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்துக்கு, தன்னால் முடிந்தவரை உதவி செய்ய முடிவு செய்தார்.இதற்காக, கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்பி  வைக்க கேரள அரசு தீர்மானித்தது. முதல்வர் பினராய் விஜயன் உத்தரவின்படி ரயில் மூலம் சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து தமிழக முதல்வர்  அலுவலகத்திடம் நேற்று தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் தற்ேபாது குடிநீர் தேவையில்லை என்று தமிழக முதல்வர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு குடிநீர் அனுப்பும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டுள்ளது. இந்த தகவல் கேரள அரசு தரப்பில்  இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்
சென்னை: உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள முதலமைச்சரின் செயலாளர் தமிழக முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர்  அனுப்பலாமா என கேட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் தமிழக முதலமைச்சரின் செயலாளர், உள்ளாட்சி துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை  செய்து, தகுந்த முடிவு  செய்வோம். எனினும்  கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரளா அரசு தண்ணீர் தர முன்வந்ததற்கு முதற்கண் தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றி. சென்னையில் ஒருநாள் குறைந்தபட்ச தேவை 525 எம்எல்டி தற்போது ஒரு முறை  கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் நீரினை (2 எம்எல்டி ) இங்கேயே சமாளித்து வருகிறோம். தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியினை நாடுவோம். கேரளா அரசு தினமும் 2எம்எல்டி  தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நாளை (இன்று) நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் உரிய  முடிவினை அறிவிப்பார்கள். இதற்கிடையில் கேரளா அரசு வழங்கும் தண்ணீரை தமிழ்நாடு முதல்வர் கேரளா முதல்வரிடம் மறுத்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,Kerala , Tamil Nadu, government ,Kerala water
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...