×

சென்னைக்கு அடுத்தாண்டு முதல் நிலத்தடி நீர் கிடைக்காது

* மழைநீரை சேமிக்காவிட்டால் பெரும் ஆபத்து * தமிழக அரசு, மக்களுக்கு நிதி ஆயோக் எச்சரிக்கை

புதுடெல்லி: சென்னை, பெங்களூரு உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது. கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்  தெரிவித்துள்ளது.தமிழகம் முழுக்க தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுகின்றனர். குடிநீர் வழங்கும் ்ஏரிகள் வறண்டு விட்டன. இந்த நிலையில், நிதி ஆயோக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாக இருக்காது. வறண்டு போய்விடும். 10 கோடி மக்கள் இதனால்  பாதிக்கப்படுவார்கள். சென்னையில் 3 ஆறுகள், குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள், 6 காடுகள் உள்ளன. மற்ற மெட்ரோ நகரங்களில் கூட இந்த அளவுக்கு மழை மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் சென்னையில் கடும் வறட்சி காணப்படும்.

குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய மெட்ரோ நகரங்கள் அனைத்திலும் நிலத்தடி நீர் சுத்தமாக வறண்டு விடும். 2030ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் மிக கடுமையாகி விடும். மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு தண்ணீர்  கிடைக்காது.
மழைநீர் சேகரிப்பை முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசும், பொது மக்களும் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில், நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இந்த பிரச்னையில் இருந்து விடுபட மழை நீர் சேகரிப்பு மட்டுமே பலன்தரக்கூடியது என்று தேசிய நீர்  அகாடமியின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மனோகர் குஷலானி தெரிவித்துள்ளார்.
 மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த செலவு அதிகம் ஆகாது. வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் இதை எளிதாக செயல்படுத்தலாம். அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு பெரிய மனதோடு இதை நடைமுறைப்படுத்த முன்வர  வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பலன் தருமா?
தேசிய நீர் அகாடமியின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மனோகர் குஷலானி கூறுகையில், ‘‘சென்னையை பொறுத்தவரை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு நம்பியுள்ளது. ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. செலவு மிகவும்  அதிகமாகும். எனவே, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முழுமையான தீர்வு தராது. மழைநீர் சேகரிப்பு ஒன்றே சிறந்த வழி. அரசும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றி மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க  செய்யலாம்’’ என்றார்.

சென்னையில் ஆறுகள் இருந்தும் பயனில்லை
சென்னையில் 3 ஆறுகள், குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள், 6 காடுகள் உள்ளன. கொசஸ்தலை ஆறு, கூவம் மற்றும் அடையாறு ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. கழிவுநீர் கலந்து இவை ஆறு என்ற தகுதியையே இழந்து விட்டன. இதுபோல்,  பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழவேற்காடு ஏரி, காட்டுப்பள்ளி தீவு, மாதவரம் போன்ற பகுதிகள் நீர்ப்பிடிப்பு நிறைந்தவை. வண்டலூர், கிண்டி பூங்கா, சென்னை ஐஐடி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, தியோசபிகல் சொசைட்டி ஆகிய  வனப்பாங்கான பகுதிகள் நகரத்துக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. மழைநீர் சேமிப்பு, தண்ணீர் மேலாண்மை சரிவர இல்லாததால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

* சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் தண்ணீர் இருக்காது. 10 கோடி பேர் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்.
* 2030ம் ஆண்டு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது.
* 3 ஆறுகள், 4 குடிநீர் ஏரிகள், நகருக்குள்ளேயே வனப்பகுதிகள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் சென்னையில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது.
* நிலத்தடி நீர் சேகரிப்பை செயல்படுத்தாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரே இருக்காது.



Tags : Chennai , Chennai, year, Ground water, available
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...