பள்ளி பேருந்தில் வரக்கோரி அடாவடி: மாணவ-மாணவிகளை சிறைவைத்த தனியார் பள்ளி நிர்வாகம்... கோவையில் பரபரப்பு

கோவை: கோவை அருகே விளாங்குறிச்சி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கே.ஜி. வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கமாக மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் நேற்று யாரும் வீடு திரும்பவில்லை. குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். அங்கு மாணவ- மாணவிகளை வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்திலேயே அமர வைத்திருந்தது தெரியவந்தது. இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும்.

தனியார் ஆட்டோ, வேன்களில் பள்ளிக்கு அனுப்ப கூடாது’’ என பெற்றோர்களுக்கு நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் ஆவேசம் அடைந்து, பள்ளி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாளை இது பற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறி, குழந்தைகளை பெற்றோருடன் ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளை வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளி நிர்வாகம் சிறை வைத்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : student school ,private school administration , School Bus, Private School Administration, Coimbatore
× RELATED அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு...