×

ஜூன் 28ல் சட்டப்பேரவை கூடும் நிலையில், 24ம் தேதி அமைச்சரவை கூட்டம்: மானிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

சென்னை: வரும் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. ஜூன் 24ம் தேதி(திங்கட்கிழமை) காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. பொதுவாக, சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டம் நடைபெறும். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் கூடுகிறது. தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை  உடனடியாகக் கூட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக சட்டமன்றம் கூடியது. மேலும் பட்ஜெட் மீதான விவாதமும் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் மானிய கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்த வரும் 28ம் தேதி சட்டப்பேரவை கூடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபுப்படி 25 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள நிலையில் பேரவை கூடுகிறது. மேலும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

Tags : Legislative Assembly , Cabinet meeting, grant request, on 24th, Govt
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...