×

குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் -1 தேர்வை ரத்து செய்யக்கோரி விண்ணப்பதாரர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கு விவரம்:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 1,68,000 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 9,050 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. கட் ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த தேர்வு நடத்தப்பட்டது என்றும் விக்னேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே குரூப்-1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.  இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்த போது, குரூப் -1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இது தொடர்பாக ஜூன் 17ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

டி.என்.பி.எஸ்.சி பதில் மனு:

அதன்படி டி.என்.பி.எஸ்.சி கடந்த 17ம் தேதி பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டது தொடர்பாக 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாகவும் வினாத்தாளில் 5 கேள்விகளுக்கு 1க்கும் மேற்பட்ட சரியான விடைகள் இருந்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் மனுதாரர் விக்னேஷ் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வு மதிப்பெண்களை இணையத்தில் வெளியிடகூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளதால் அந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது என்று தெரிவித்திருந்தது.

வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விக்னேஷுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டாலும், அவர் இந்த தேர்வில் தேர்ச்சி ஆகவில்லை. எனவே, தேர்வை ரத்து செய்யக்கோரி, அவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஒரு பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டு உத்தரவிட முடியாது என்றும், மதிப்பெண் தொடர்பாக விக்னேஷ் தொடர்ந்த மனுவுக்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags : Court ,Group-1 , DNPSC, Group-I Selection, Cancellation, Case, High Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...