×

கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு: கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை  திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நாசமாயின. இந்த பேரழிவுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம்  தரப்படவில்லை. இதையடுத்து, தங்களது வீடுகள், நிலங்கள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள்,  நிவாரணம் கேட்டு  போராடினர்.  அப்போது, போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கஜா புயலால் சேதமான எனது ஓட்டு வீட்டிற்கு அரசிடம் அறிவிக்கப்பட்ட இழப்பீடு வழங்க கோரினேன். அதிகாரிகள் ஆய்வு செய்து இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அரசு தரப்பில் கஜா புயல் தொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மை வெளியிட்ட அரசாணையில் முழுமையாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு  நிவாரணம் வழங்குவது குறிப்பிடப்படவில்லை. அதை நேரத்தில் பகுதியாக சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மனுதாரருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை, இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்து நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு இழப்பிற்கு நிவாரணம்  வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு நிவாரணம் வழங்காமல் உள்ளது ஏற்க முடியாது என கூறிய உயர்நீதிமன்ற கிளை, கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கொள்கை முடிவு  எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. மேலும், கொள்கை முடிவு குறித்து 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Tags : storm ,homes ,government ,Ghazi ,Supreme Court , Gaja Storm, Drive-In, Compensation, Policy Decision, Government, High Court Branch
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...