கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர நிலையான வழிமுறைக்கு அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொத்தடிமைகளாக பணிபுரிவோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர நிலையான செயல்பாட்டு வழிமுறைக்கு அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன்படி கொத்தடிமைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவர்களை மீட்பதற்காக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும் இதில் குறைந்தபட்சம் இரண்டு பெண் அதிகாரிகள் இருக்க வேண்டும், மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அல்லது தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் இடம் பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை தொடர்ந்து மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், உடனடியாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால் அதற்கென வழங்கப்படும் நிவாரண தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவைகளும், அரசின் பல்வேறு திட்டங்களும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொத்தடிமைகளை வைத்திருப்பவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


× RELATED கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட...