×

அண்ணா பல்கலை.கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல்: உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக கூட்டமைப்பு கூட்டம் பல்கலை  கழக வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைகழக பதிவாளர் குமார் செய்தியாளர்களுக்கு விளக்கினார். அப்போது பேசிய அவர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள்  மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் கட்டணம் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய கட்டணத்தை அமல்படுத்துவோம்  என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக பதிவாளர் குமார் தெரிவித்தார். அதன்படி தோல்வி  அடைந்த பாடங்களை பழைய மாணவர்கள் வரக்கூடிய நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எழுதலாம் என்றும் இதுவே கடைசி வாய்ப்பு என்றும் பதிவாளர் குமார் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பல்கலைக்கழகம் கொடுத்த கட்டண உயர்வில் 30% குறைத்துள்ளோம் என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா கூறியுள்ளார்.  இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, சில பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களை பெற்று ஆய்வு நடத்துவதற்காக தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குநர் அருளரசு  தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் செந்தில், இளையபெருமாள், மற்றும் கோவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் தாமரை ஆகியோர் இந்த புது குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது தொடர்பான புகார்களை இந்த குழுவிடம் மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் 044- 22351018,  22352299,செல்போன் எண் 7598728698 ஆகியவற்றில் குழுவின் தலைவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் கூறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்படும் புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் புதிய குழுவின் தலைவர் அருளரசு தெரிவித்திருந்தார்.


Tags : Mangatram Sharma , Anna University Colleges, New Fees, Government of Tamil Nadu, Higher Education Secretary Mangatram Sharma
× RELATED அண்ணா பல்கலை கல்லூரிகளில் புதிய...