×

விபத்தில் 9 மாணவர்கள் காயம்... ஆபத்து நேரத்திலும் ஸ்கேனுக்கு ரூ.500 கேட்ட ஜிஹெச் ஊழியர்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ரெங்கசாமிபட்டி விலக்கில் நேற்று ஷேர் ஆட்டோவில் ஏறி மாணவ, மாணவிகள் சிலர், உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டியில் இருந்து எழுமலை நோக்கி சென்ற லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், மாணவிகள் மகாலெட்சுமி(17), அர்ச்சுனா(17), ராசிகா(14), சாந்தினி(15), சோபிகா(16) மற்றும் மாணவர்கள் பிரகாஷ்(13), சஞ்சாய்(12), தெட்சிணாமூர்த்தி(14) உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவ,மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் வராத நிலையில் சி.டி.ஸ்கேன் எடுக்க சென்றபோது ரூ.500 பணம் கொடுத்தால் மட்டுமே ஸ்கேன் எடுக்க முடியும் என ஒரு ஊழியர் கூறியுள்ளார். இதனால் பார்வையாளரே ரூ500 கொடுத்து சி.டி.ஸ்கேன் எடுக்க செய்துள்ளனர். பின்னர் அங்கு வந்த பெற்றோர், பணம் கொடுத்தால் தான் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியும் என்கிறீர்களே, உயிரை திரும்ப கொடுக்க முடியுமா என கதறி அழுதனர். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கூடுதல் பஸ் வேண்டும்

விபத்தில் காயமான மாணவ, மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வருகின்றனர். அனைவருக்குமே இலவச பஸ் பாஸ் உள்ளது. ஆனால் எழுமலை-உசிலம்பட்டி சாலையில் காலை 7 மணி முதல் 8 மணி வரை அரசு பேருந்து அதிகம் கிடையாது. ஒரு சில பஸ் இருந்தபோதும், அந்த பேருந்துகள் இதுபோன்ற பஸ் நிறுத்தங்களில் நிற்பதில்லை. காரணம் ஏற்கனவே பேருந்தில் அதிக பயணிகள் தொங்கி கொண்டு வருகின்றனர். இதனால் தான் மாணவ, மாணவிகள் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை உள்ளது. அரசு பேருந்து கிளை மேலாளர், கலெக்சனை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, உசிலம்பட்டியிலிருந்து கோடாங்கிபட்டி வரை கூடுதலாக பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Rs , Usilampatti, accident, bribery
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...