×

புதுக்கோட்டை பகுதியில் 2 இடங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் ரயில்வே கேட்டில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் 2 இடங்களில் ரயில்வே கேட் உள்ளது. இந்த 2 ரயில்வே கேட்டை தாண்டித்தான் திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட நகரங்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டும். இதில் ஒன்று திருச்சி செல்லும் வழியில் உள்ள கருவேப்பிலான் ரயில்வே கேட் மற்றொன்று மணப்பாறை, இலுப்பூர் செல்லும் திருவப்பூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட். இந்த இரண்டு ரயில்வே கேட் வழியாக கனரக வாகனம், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் திருவப்பூர் பகுதியில் ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படும். அந்த சமயத்தில் வாகனங்கள் குறிப்பாக இரண்டு பகுதிகளிலும் பல மீட்டர் தூரம் வரிசை கட்டி நிற்கும். மேலும் இங்கு குடியிருப்பு பகுதி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகளவு இருக்கும். ரயில் கடக்கும்போது ரயில்வே கேட் மூடும்போது அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது.

இதேபோல கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பல நேரங்களில் ரயில்வே கேட் மூடும்போது மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கிறது. எனவே இந்த இரண்டு ரயில்வே கேட்டுகளிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல நாட்களாக பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகிறது. இந்த ரயில் கேட் அமைந்துள்ள பகுதியில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பலமுறை அப்போது இருக்கும் ரயில்வே துறை அமைச்சரிடம் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். டெல்லியிலும், திருச்சியிலும் ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வருகின்றனர். ஆனால், இதுவரை ரயில்வே மேம்பாலம் அமைக்காமல் ரயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் தொடர்ந்து இந்த பகுதிகளியில் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: தற்போது உள்ள தொழில் மற்றும் வணிக பெருக்கத்திற்கு ஏற்ப வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இந்த இரண்டு பகுதிகளிலும் மேம்பாலம் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. புதுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், சமூக சேவை சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனு கொடுத்திருக்கின்றனர். கருவேப்பிலையான் கேட் மற்றும் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க ஆய்வு மட்டுமே மேற்கொண்டுள்ளனர். எப்போது இந்த பணிகள் நடக்கும் என்று தெரியவில்லை. மேம்பாலம் பணிகள் முடிந்தால்தான் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Pudukottai , Pudukkottai, Railway Gate
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி