×

எருமாபாளையம் குப்பைமேட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.20.45 கோடியில் பசுமை பூங்கா

சேலம்: சேலம் மாநகராட்சியில் ரூ.20.45 கோடி மதிப்பில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு, நவீன முறையில் சுகாதார பசுமை தளமாக மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 44வது வார்டில் கடந்த 75 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கில் 2011ம் ஆண்டு முதல் திடக்கழிவுகள் கொட்டுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காரணங்களை கருத்தில் கொண்டு, எருமாபாளையத்தில் உள்ள திடக்கழிவு கிடங்கினை பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்தாண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கியது. இதற்கான விழாவில், பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20.45 கோடி மதிப்பில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு, நவீன முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (19ம்தேதி) எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை மாற்றியமைக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார்.

இது குறித்து கமிஷனர் சதீஷ் கூறுகையில், ‘‘19.33 ஏக்கரில் உள்ள திடக்கழிவுகளை 6.70 ஏக்கர் பரப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றிய நில பரப்பு, விஞ்ஞான முறையில் மூடப்பட்டு வருகிறது. மூடப்பட்ட நிலப்பரப்பு 3 தளங்களாக பிரிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம், புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை மற்றும் சைக்கிள் ஓட்டும் தளம் அமைக்கப்படுகிறது. தற்போது சுமார் 7 ஏக்கர் பரப்பளவிற்கு, தரைமட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தப்பட்டு, கழிவுகள் சரியாத வண்ணம், பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமான 11 மீட்டர் உயரத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 12.63 ஏக்கர் நிலப்பரப்பு, மாநகராட்சியின் இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,’’ என்றார். இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்ரவர்த்தி, முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Green Park ,Erumapalayam , Green Park, Salem
× RELATED தீபாவளி சிறப்பு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல்: கண்டக்டர் சஸ்பெண்ட்