கொடைக்கானலில் பேரி அறுவடை துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிக்காய் அறுவடை துவங்கியுள்ளது. இந்தாண்டு விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேரி எனப்படுவது தாவர பேரினத்தில் உள்ள உண்ணத்தக்க ஒரு பழத்தினை குறிக்கும் சொல்லாகும். சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பேரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியா, இலங்கையில் ஒரு சில மலைப் பிரதேசங்களிலும், இந்தோனிசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் மொத்தம் 30 வகையான பேரிகள் பயிரிடப்படுகிறது. மிதமான தட்பவெப்பம், குளிரான பகுதிகளில் இப்பழம் நல்ல விளைச்சலை கொடுக்கும். கொடைக்கானல் அருகே செண்பகனூர், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், வில்பட்டி, பெரும்பள்ளம், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 3000 ஹெக்டேர் பரப்பளவில் பேரி பயிரிடப்படுகிறது. நாட்டுப் பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, ஊட்டி பேரி, வால்பேரி போன்ற வகைகளை வளர்த்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலம் பேரிக்காய் சீசனாகும். பிற பகுதிகளில் விளையும் பேரிக்காய்களை விட கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் பேரிக்காய்களுக்கு தனிச்சுவை உண்டு. இதனால் இங்கு விளையும் பேரிக்காய்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விளைச்சல் மற்றும் ரகத்திற்கு தகுந்தாற்போல் ஒரு கிலோ பேரிக்காய் ரூ.30 முதல் 40 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பேரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதுடன், நல்ல விலையும் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலச்சிக்கல் நீங்கி நீர்ச்சத்து பெருகும் மருத்துவ குணம் பேரியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : start ,Kodaikanal , Kodaikanal, pear
× RELATED ‘கிளீன்’ ஆகிறது வைகை ஆறு கருவேலம்...