×

குளம், குட்டைகளை தேடி அலையும் கால்நடைகள்... நெல்லை வட்டாரத்தில் தாண்டவமாடும் ‘வறட்சி'

நெல்லை: நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக கால்நடைகள் தண்ணீருக்கு வழியின்றி தவிக்கின்றன. விவசாயிகள் நாற்று பாவ தண்ணீரின்றி நெல்லை கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து செல்கின்றனர். பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், மானூர் வட்டாரங்களில் தண்ணீருக்கே வழியின்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவால் தாமிரபரணி ஆற்றிலும் நாளுக்கு நாள் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. தாமிரபரணியின் கிளை கால்வாய்கள், குளங்கள் என பெரும்பாலான நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. நெல்லை அருகே குன்னத்தூர் சுற்றுவட்டாரங்களில் வறட்சியால் விவசாயிகள் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். குன்னத்தூர் சுற்றுவட்டாரங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். ஜூன் மாதத்தில் கார் சாகுபடிக்கான பணிகளை தொடங்கிவிடுவர். இவ்வாண்டு நெல்லை கால்வாயும் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் நாற்று பாவுவதற்கு கூட தண்ணீரின்றி தவிக்கின்றனர். நெல்லை கால்வாயில் குன்னத்தூர் வாய்க்கால் பாலத்திற்கு மேல்புறம் சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து நாற்று பாவுவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழை தாமதமாக வந்தால் நாற்றுக்கள் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குன்னத்தூர், திருவேங்கடநாதபுரம், விளாகம், கரிக்காதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அவற்றிற்கு குடிநீரின்றி தவிக்கின்றனர். ஆடுகளை மொத்தமாக வளர்க்கும் விவசாயிகள் தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்து வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் நெல்லை கால்வாயில் தண்ணீர் குட்டையாக தேங்கியுள்ள இடங்களில் அவற்றின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். குன்னத்தூரில் உள்ள ஒட்டன்குளம், குன்னத்தூர் குளம், பேட்டை குளம் உள்ளிட்ட குளங்கள் வறண்டு காணப்படுவதால் மேய்ச்சலுக்கு பின்னர் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுவதே பெரும்பாடாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் கார் சாகுபடி மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்திலும் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் அணைகளில் மிககுறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, பாளையங்கால்வாய்களில் உள்ளிட்ட கால்வாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதன்காரணமாக காய்வாய்களில் புல், செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு வரப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள் பட்டிபோட்டு ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.

Tags : drought , Livestock, drought
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!