×

சீனியர் எஸ்பி தலைமையில் அதிரடிப்படை அதிரடி... மணல் கடத்திய 31 பேர் சிறையில் அடைப்பு

வில்லியனூர்: வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு நடைபெற்றுவரும் நிலையில் நேற்று அதிகாலை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் சிறப்பு அதிரடிப்படையினர் மணல் அள்ளிய 31 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 மாட்டு வண்டி, செல்போன்கள், பைக்குகள், லோடுகேரியர் வண்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் சென்னையில் வீடுகளை காலி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பட்டதாரிகளும் விடுதிகளை காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்று வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் பெரும்பாலான ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து தண்ணீரை சிக்கமாக பயன்படுத்த பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் வில்லியனூர் கொம்யூனில் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மாவட்ட கலெக்டர் அருண் அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் சப்-கலெக்டர் ஹஷ்வத் ஷாரப், வருவாய் அதிகாரி சிவசங்கரன், தாசில்தார் மகாதேவன் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீர்நிலையை ஆழப்படுத்தி அவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வில்லியனூர் அடுத்த சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்கதையாகி வருவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

 இதுதவிர ஒதியம்பட்டு சங்கராபரணி ஆறு மற்றும் அதனை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஐஓசி பின்புறத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் ஐஓசி மதில்சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பதும், ஆற்றோரங்களில் உள்ள மரங்கள் அனைத்தும் வேருடன் சாய்ந்துள்ளது பற்றியும் கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் (பொ) நேற்று அதிகாலை 2 மணியளவில் வில்லியனூர் காவல் சரக பகுதிக்கு வந்தார். சிறிதுநேரத்தில் மேற்கு எஸ்பி ரங்கநாதன், சிறப்பு அதிரடிபடை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ ரமேஷ், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல், எஸ்ஐ நந்தகுமார் மற்றும் 25க்கும் மேற்பட்ட ஐஆர்பிஎன் காவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாட்டு வண்டி மற்றும் மினிவேனில் மணல் கடத்தி வந்தவர்களை ஒவ்வொருவராக வழியில் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். மணல் திருடி எடுத்து வந்தவரை பிடித்ததும் முதலில் அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடிபட்டவர்களிடமிருந்து தகவல் கொடுக்கப்படுவது துண்டிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பிடியில் இருந்து மணல் திருடர்கள் தப்ப முடியவில்லை. சீட்டு கட்டுகள் போல் ஒவ்வொருவராக அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஒவ்வொரு வண்டியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பி அவை மங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய 23 மாட்டு வண்டிகள், 25 செல்போன்கள், 1 மினி வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பிறகு மணல் கொள்ளையில் ஈடுபட்ட சுபாஷ் உள்ளிட்ட 31 மாட்டு வண்டி தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்து அவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்திருக்காமல் உடனே நகர பகுதியில் உள்ள முதலியார்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே மங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அழைத்து செல்ல யாரும் வரவில்லை. இதனால் அங்கு 36 மாடுகள் தண்ணீர் மற்றும் உணவுயின்றி பரிதவித்து வந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்களை அழைத்து மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, மாடுகளை வீட்டுக்கு கொண்டு சென்றனர். வில்லியனூரில் மணல் திருட்டில் ஈடுபட்டு குற்றவாளிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் மணல் திருட்டில் ஈடுபட்ட 31 பேர் கும்பல் பிடிபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Tags : Strike action ,SP , Sand, arrested
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்