×

நல்லாகுளம் கிராமத்தில் கடும் வறட்சி... குடிநீர், தீவனம் இல்லாமல் சாகும் மாடுகள்

சிவகங்கை: சிவகங்கை அருகே நல்லாகுளம் கிராமத்தில் போதிய குடிநீர், தீவனம் கிடைக்காமல் நாட்டு மாடுகள் இறந்து வருகின்றன. சிவகங்கை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயமும், கால் நடைகள் வளர்ப்பும் பிரதான தொழிலாகும். ஆடு, மாடுகள் வளர்த்து அதன் மூலமே குடும்பத்திற்கு வருமானம் தேடிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. சிவகங்கை அருகே நல்லாகுளத்தில் கள்ளவண்டான், ராஜலட்சுமி தம்பதிகள் வசித்து வருகின்றனர். 20 ஆண்டுக்கு முன்பு நான்கு நாட்டு மாடுகளை ராஜலட்சுமி சீதனமாக கொண்டு வந்தார். விவசாயமும் பால் உற்பத்தியும் செய்து பிழைத்து வந்தனர். இந்நிலையில் நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தினால் தற்போது சுமார் 100 மாடுகள் வரை வளர்த்து பராமரித்து வருகின்றனர். விவசாயம் பொய்த்ததால் பால் கறந்து விற்பனை செய்வதை தொழிலாக மாற்றிக் கொண்டனர். மாடுகளின் சாணங்களுக்காக வயல்களில் இவைகளை தங்க வைப்பதன் மூலம் வயல்களுக்கு அதிகப்படியான விளைச்சலும், மாடுகளுக்கு தீவனமும் கிடைக்கும்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மழை இல்லாமல் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் இப்பகுதியில் விளைச்சல் இல்லை. வறட்சியால் மாடுகளுக்கு குடிக்க நீர் இல்லை. மேலும் மேய்ச்சல் நிலங்களில் மழை இல்லாமல் போதிய தீவனங்களும் மாடுகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் 35 மாடுகள் பலியாகியுள்ளன. எஞ்சியுள்ள மாடுகளுக்கு நீரும் இல்லாமல், தீவனமும் இல்லாமல் பால் உற்பத்தி முற்றிலும் குறைந்துவிட்டது. எலும்பும், தோலுமாக உள்ள மாடுகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். கள்ளவண்டான் கூறியதாவது: இந்த ஆண்டு கடுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் எப்படியாவது சமாளித்து விடுவோம். ஆனால் இந்த ஆண்டு மனிதர்களுக்கே நீர் கிடைக்காமல் வெவ்வேறு கிராமங்களில் சென்று கிடைக்கும் நீரை எடுத்து வருகிறோம். இதனால் மாடுகளுக்கு குடிநீர் அளிக்க முடியவில்லை. கண்மாய், குளங்கள் முற்றிலும் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. நீர் இல்லாமல் கண் முன்னே மாடுகள் இறப்பதை பார்க்க முடியவில்லை. வேதனையாக உள்ளது. கால்நடைத்துறையிலும் மனு அளித்துள்ளோம். மாடுகளுக்கு உணவு, நீர் அளிக்க உதவ வேண்டும் என்றார்.

Tags : Drought ,village , Drought, drinking water
× RELATED புதுகை மாவட்டத்தில் கடும் வறட்சியால்...