×

ஊட்டி அருகே நீரோடையை மறித்து தடுப்பணை... அதிர்ச்சியில் விவசாயிகள்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதிகளில் தனியார் சார்பில் மலைகளுக்கு இடையே தேயிலை தோட்டத்தில் நீரோடையை மறித்து தடுப்பணை கட்டி வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் aமுதல் இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்ேடாபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதனால், ஆண்டு முழுக்க பெரும்பாலான நீரோடைகளில் தண்ணீர் ஓடும். இந்த நீரோடைகளில் உள்ள தண்ணீரை நம்பியே நீலகிரி மாவட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள தண்ணீர் ஆறுகளாக உருவெடுத்து பவானி ஆற்றில் கலந்து வருகிறது. பவானி படுகை விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத நிலையில், தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என வர்ணிக்கப்பட்டு வந்த நீலகிரி மாவட்டமே ஆட்டம் கண்டுள்ளது.

மேலும், நீரோடைகள், நீர் நிலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை அழித்து தற்போது குடியிருப்புகள், பங்களாக்கள் உருவாகி வருகிறது. மேலும், தேயிலை தோட்டங்களில் இருந்த மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. இதனால், மழை மிகவும் குறைந்துவிட்டது. பருவமழை குறித்த சமயங்களில் பெய்வதில்லை. சில சமயங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து ேபாவதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கிறது. மழை குறைந்த காரணத்தினால், ஆண்டு முழுக்க தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த பெரும்பாலான நீரோடைகளில் தற்போது மாதத்திற்கு 6 மாதம் தண்ணீர் பார்ப்பதே பெரும் கடினமாக உள்ளது. மேலும், பவானிக்கு செல்லும் தண்ணீர் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், நீரோடைகள் மற்றும் ஆறுகளை காக்க வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறைகள் உள்ளன.

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் ஒரு நீரோடை உருவாகி சாம்ராஜ் எஸ்டேட் வழியாக காசோலை, மணியாபுரம் வழியாக மணியாபுரம் ஆற்றில் கலக்கிறது. பின், இந்த தண்ணீர் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நீரோடை தற்போது தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தின் நடுவே செல்கிறது. இரு மலைகளுக்கு நடுவே இந்த நீரோடை, வெள்ளி இழைகள் போல் தவழ்ந்து செல்வது வழக்கம். தற்போது இந்த நீரோடையை மறித்து ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணைக்கான அனுமதி பெற்றுள்ளார்களா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில், அங்கு பிரமாண்டமான அணை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அணை கட்டினால், தேவர்சோலை, காசோலை போன்ற பகுதிகளில் விவசாயம் செய்து வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது. மேலும், இந்த அணையின் கட்டுமான பணிகள் தரமானதாக இல்லையெனில், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போது அணை உடைந்து பெரிய அளவிலான விபத்து ஏற்பட கூடும். சாதாரணமாக ஒரு அணை கட்ட வேண்டுமாயின், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அரசு தடுப்பணை கட்ட வேண்டுமாயின் பல்வேறு நிபந்தணைகள் உள்ளன.

மேலும், பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். குறிப்பாக, மத்திய சுற்றுச்சூழல்த்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தனியார் தேயிலை ேதாட்டத்தில் நீரோடையை மறித்து இரு மலைகளுக்கு நடுவே பிரமாண்ட அணை கட்டி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அதனை மீட்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் தனியார் சார்பில் பிரமாண்ட அணை ஒன்று கட்டி வருவதை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உட்பட அனைத்து துறைகளும் வேடிக்கை பார்த்து வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீரோடையை மறித்து தடுப்பணை மற்றும் அணைகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. அவர்கள் தடுப்பணை கட்டுவதற்கு வேறு துறையிடம் அனுமதி ஏதேனும் பெற்றுள்ளார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், தடுப்பணை அல்லது அணை கட்ட வேண்டுமாயின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பல அரசு துறைகளிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்ட முடியும். நீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையிலும், விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையிலும் தடுப்பணை கட்ட முடியாது. இதுகுறித்து ஊட்டி ஆர்டிஓ., விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்தபின், அவர் அளிக்கும் அறிக்கையை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.


Tags : floodwaters ,Ooty , Ooty, barrier
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்