போதிய வகுப்பறைகள் இல்லை... மரத்தடியில் நடக்குது அரசுப்பள்ளி

சாயல்குடி: சாயல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிக மாணவர்கள் இருந்தும், போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. இதனால் மரத்தடியில் வகுப்பறை நடந்து வருகிறது. மாணவர்கள் பாடங்கள் படிக்க முடியவில்லை என பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். புதியதாக தொடங்கப்பட்ட யூ.கே.ஜி வகுப்பில் 42 மாணவர்களும் வருகின்றனர். கடலாடி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அதிக மாணவர்களை கொண்ட பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி கடந்த 1952ல் துவங்கப்பட்டது. 67 வருடங்களாக போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் வளாகத்திற்குள் மரத்தடி நிழலில் உட்கார்ந்து படித்து வருகின்றனர். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

பெற்றோர்கள் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஆங்கில வழி கல்வியில் கற்றல், கற்பித்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகளில் முதன்மையாக இப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்குவதால் குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகிறோம். இதனால் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து செல்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. ஆசிரியர்கள் மரத்தடி நிழலில் வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அருகில் கிழக்கு கடற்கரை சாலை செல்வதால், வாகனங்களால் இடையூறும் ஏற்படுகிறது. மாணவர்கள் விளையாட மைதானம் கிடையாது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மாற்று இடத்தில் பள்ளியை கட்டிதர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : classrooms ,government school ,woods , Classrooms, Government School
× RELATED மரவேரில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு