×

சிகரம் தொட ஆயத்தமான மாற்றுத்திறனாளி போட்டிகளில் பங்கேற்க முடியாமல் வறுமையில் தவிக்கும் தங்க மங்கை

சேலம்: சேலம் அருகே தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் குவித்த மாற்றுத்திறன் வீராங்கனை, வறுமையால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் பரிதவித்து வருகிறார். அவர் குறித்த தகவல்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் சித்தர்கோவில் அடுத்த, பொன்னகரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன். இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் சூர்யா (25). தடகள வீராங்கனையான சூர்யாவுக்கு இளமையில் இருந்தே காது கேட்காமல், வாய் பேச முடியாத குறைபாடு இருந்துள்ளது. ஆனால் தனது பள்ளிப்பருவத்தில் இருந்து சூர்யா, அத்லெட்டிக் விளையாட்டுகளில் பெருத்த ஆர்வம் ெகாண்டிருந்தார். பள்ளியில் படிக்கும் போதே அங்கு நடக்கும் ஓட்டம், வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். பெற்றோரின் ஊக்கம் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் காரணமாக தொடர்ந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
இது குறித்து சூர்யாவின் உறவினர்கள் கூறியதாவது: சூர்யாவை பொறுத்தவரை, அவருக்கு இருக்கும் குறைபாட்டை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. கடந்த 2010ல் மாவட்ட அளவில் நடந்த காதுகேளாதோருக்கான 400 மீ., ஓட்டத்தில் தங்கம், 2012ம் ஆண்டு நடந்த வட்டெறிதலில் தங்கம், 2013ம் ஆண்டு பெங்களுரில் நடந்த தேசிய தொடர் ஓட்டத்தில் வெண்கலம், 800, 400 மீ., ஓட்டத்தில் தங்கம், 2014ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான தட்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் ெவள்ளி, 2016ல் ஜாம்ஜெட்பூரில் நடந்த தேசிய அளவிலான கைபந்து போட்டியில் தங்கம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளார்.

மேலும், தொடரோட்டம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்தார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. கடந்தாண்டு சேகர் (30) என்பவருக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். தடகளத்தில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த சூர்யா, இப்போது கணவருடன் வெள்ளித்தொழில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவ்வாறு உறவினர்கள் தெரிவித்தனர். வீராங்கனை சூர்யா குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் குறித்து அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளி வீராங்கனை சூர்யா குறித்து தெரியவந்தவுடன் அவரை சந்தித்து அவர் பெற்ற சான்றிதழ், அவர் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளோம். அவைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

Tags : Salem, goldmine, competition
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...