×

சபரிமலை விவகாரம்: பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் வேண்டும்....மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது  பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காகவே காத்திருந்தது போல, இளம்பெண்கள் சபரிமலை செல்ல அனைத்து வசதிகளும் உடனடியாக செய்யப்படும் என்று பினராய்  விஜயன் தடாலடியாக அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கேரளா முழுவதும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பா.ஜ.வும்,  காங்கிரசும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கின. இதனால் கேரளா முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் தான் ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் சபரிமலையில் தரிசனம் செய்துவிடலாம் என்ற ஆவலில் பல இளம்பெண்கள் சபரிமலைக்கு வந்தனர்.  ஆனால் சபரிமலையில் வெடித்த வரலாறு காணாத வன்முறையால் ஒரு இளம்பெண்ணால் கூட தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள்  நடை திறந்திருக்கும் என்பதால் இந்த நாட்களில் இளம்பெண்களை எளிதில் தரிசனத்திற்கு கொண்டு சென்று விடலாம் என்று  திட்டமிட்ட கேரள அரசு, பலத்த பாதுகாப்பும், பக்தர்களுக்கு கடுமையான நிபந்தனைகளும் விதித்தது. 144 தடை  உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் ஆகிய இடங்களில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள், சன்னிதானத்தில் ஒரு ஐ.ஜி., மொத்தத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க ஒரு ஏ.டி.ஜி.பி. என 5000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள், முன்னெச்சரிக்கை கைது,  சன்னிதானத்தில் தங்க தடை, 6 மணிநேரத்திற்குள் தரிசனத்தை முடித்து திரும்பவேண்டும், சரண கோஷம் எழுப்பக் கூடாது உட்பட போலீசின் கட்டுப்பாடுகள் பக்தர்களை  திண்டாட வைத்தது. சன்னிதானத்தில் சரண கோஷம்  எழுப்பிய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் கெடுபிடியால் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. இதனால் வருமானமும்  குறைந்தது.

இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இம்மசோதா, இந்த  வாரம் விவாதத்துக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில், பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேரள தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை விவகாரம், தனிநபர் மசோதாவாக மத்திய அரசின் முன்பு இருக்கிறது. தனிநபர் மசோதாக்களின் கதி என்னவாகும் என்று  எல்லோருக்கும் தெரியும்.அத்தகைய சூழ்நிலை எழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்களவையில்  பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும். மாநில பா.ஜனதா தலைமையும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


Tags : Sabarimala ,devotees ,Kerala Government ,Central ,Government , Sabarimala affair, pilgrims trust, law, central government, Kerala govt
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு