×

குழந்தைகளை அழைக்க வரும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைக்கான கட்டணம் பல மடங்கு உயர்வு: பெற்றோர்களை சந்திக்க ஐஐடி வளாக இயக்குனர் மறுப்பு,..கொதிக்கும் பெற்றோர்கள்

சென்னை: பெற்றோர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைக்கான கட்டணத்தை சென்னை ஐஐடி பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்க சென்றால் வளாக இயக்குனர் சந்திக்க மறுப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   சென்னை கிண்டி செயல்பட்டுவரும் ஐஐடியின் வளாகத்தில் மத்திய அரசு துறைகளைச் சார்ந்த பல்வேறு பள்ளிகள் செயல்பட்டுவருகிறது. இதைத் தவிர்த்து கேந்திரிய வித்யாலயா பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  குழந்தைகளை காலை பள்ளியில் விட்டுச் செல்லவும், மாலை அழைத்து செல்லவும்  பெற்றோர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பெற்றோர்களுக்கு ஐஐடி நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை பெற இதுவரை ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி சென்னை ஐஐடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அடையாள அட்டைக்கான கட்டணம் இருசக்கர வாகனத்திற்கு 12 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனத்திற்கு 24 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.1200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கொதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக வளாக இயக்குனரிடம் புகார் அளிக்க சென்றால் அவர் சந்திக்க மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் கூறியதாவது: சென்னை ஐஐடி வளாகத்தில் ஐஐடி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள்  செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திற்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. இதைத் தவிர்த்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல முன்னாள் மாணவர்கள் கோடி கணக்கில் நிதி வழங்குகின்றனர்.

இந்த நிதியை கொண்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடி நிர்வாகம் அடையாள அட்டைக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டணத்தை உயர்த்துவதன் மூலமாக வரும் நிதியை கொண்டுதான் ஐஐடியில் பல்வேறு  வளர்ச்சி பணிகளை செய்யயும் நிலையில் ஐஐடி நிர்வாகம் இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வளாக இயக்குனர் பதில் அளிக்க மறுக்கிறார். எனவே ஐஐடி நிர்வாகம் இதில் தலையீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும். பழைய கட்டணமே தொடர வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : parents ,campus ,IIT , Children, Persons, Identity Card, IIT Campus Director
× RELATED கொரோனா சிகிச்சைக்கு தனியார்...