×

முன்விரோதத்தில் பழிவாங்க கத்தியுடன் சுற்றிய ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை: சேத்துப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் 2 பேர் சுற்றி வந்தனர்.  இதை பார்த்த போலீசார் அவர்களிடம் சென்றபோது இருவரும் தப்பி செல்ல முயன்றனர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் ஓட்டி வந்த பைக்கை போலீசார் சோதனை செய்தபோது அடி நீளமுள்ள கத்தி இருந்தது.  அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது சேத்துப்பட்டு செனாய் நகர் வெங்கடாசலம் தெருவை சேர்ந்த நந்தகுமார் (22) என்றும், இவர் சென்னையில் ஊர்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்க தனது நண்பர் கிரண்ராஜ் என்பவருடன் சாலையில் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள கிரண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

* செங்குன்றம் போலீசார் நேற்று முன்தினம் வடகரை சிக்னல் அருகே வாகன சோதனை செய்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.விசாரணையில் திருவொற்றியூர், அப்பர் தெருவை சேர்ந்த ஆனந்தன் (42) மற்றும் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்த பெருமாள் (எ) சடையாண்டி பெருமாள் (26) என்பதும், நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. எனவே, இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சவரன் நகைகள், 107 கிராம் வெள்ளி பொருட்கள், எல்இடி டிவி, பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
*  தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ராம்லால் (55). அதே பகுதியில் நகை கடை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் உள்ள நகை மற்றும் விற்பனை குறித்து ராம்லால் ஆய்வு செய்தபோது ஒரு கிலோ தங்க நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ராம்லால் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கடையில் வேலை செய்யும் ராம்லால் உறவினர்கள் கடந்த 5 ஆண்டாக நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. எனவே போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
* அடையாறு, காந்தி நகர், ராமச்சந்திர ஆதித்தனார் சாலையில் தனியார் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதன் முன்பு சுமார் நாலரை அடி உயர மாதா சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை காப்பக உரிமையாளர் வந்து பார்த்தபோது மாதா சிலையின் இரு கைகள்  உடைக்கப்பட்டு இருந்தது.
புகாரின்பேரில் அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரை என தெரிந்தது. பின்னர் போலீசார் அடையாளத்தை வைத்து அவரை தேடி பிடித்தபோது மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது.
இதையடுத்து அவரை பட்டினப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
*  சாலிகிராமம் வேலாயுதம் காலனி முதல் தெருவில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கொளப்பாக்கத்தை சேர்ந்த தாமஸ் (62), சுலைமான் (50), வடபழனியை சேர்ந்த சரவணன் (42), ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (56), திருநாவுக்கரசு (40), கோடம்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (55), கே.கே.நகரை சேர்ந்த பிரதாப் (58), சாலிகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (50), எம்ஜிஆர் நகரை சேர்ந்த அய்யப்பன் (41) ஆகிய 10 பேரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். தாமஸ் துணி வியாபாரம் செய்ய வீட்டை கடந்த மாதம் வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது வந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடமிருந்து ₹31,280 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

2வது மாடியிலிருந்து விழுந்து டெக்னீஷியன் பரிதாப சாவு
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று சந்தோஷ்குமார் 2வது மாடியில் வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது கார் பின்னோக்கி நகர்ந்து எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த சந்தோஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே சக ஊழியர்கள் சந்தோஷ்குமாரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சந்தோஷ்குமார் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Prejudice, knife, bailiff, arrest
× RELATED சென்னை தாம்பரம் அருகே...