ம.பி.யில் கொலை முயற்சி, வன்முறை வழக்கு மத்திய அமைச்சரின் மகன் கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்கின் மகன் பிரபால் படேல் நேற்று கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசம் மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங்கின் மகன் பிரபால் படேல், கடந்த சில நாட்களுக்கு முன் 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஈஷ்வர் ராய் (50), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் மாநில அமைச்சர் ஜலம் சிங் படேல் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இருந்தும், மத்திய அமைச்சரின் மகன் மற்றும் அவருடன் இருந்த சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் மகன் பிரபால் படேல் மீது கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அவரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் பிரகலாத் கூறும்போது, நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகவும் வருத்தமளிக்க கூடியது. சட்டம் தன் கடமையை செய்யும். இதுபற்றி தற்போது வேறு எதுவும் கூற முடியாது என்று கூறினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சிங் சலூஜா கூறுகையில், சட்டத்தை மீறியவர்கள் வேறு யாருமல்ல. சட்டத்தை மதிப்பதாக கூறி பெருமை அடித்து கொள்ளும் மோடி தலைமையிலான அரசில் இணை அமைச்சராக பொறுப்பில் உள்ளவரின் மகனும் உறவினரும்தான் சட்டத்தை மீறியுள்ளனர் என்றார்.

× RELATED மாற்றுத் திறனாளியாக பிறந்ததால்...