ராகுலுக்கு பிறந்தநாள்; பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர். டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ராகுலை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரசாரம் செய்தனர். தேர்தலில் வெற்றி பெற்று பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், “ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார். பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்துக்கு ராகுல் நன்றி தெரிவித்து பதில் டிவிட் செய்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தலைமையகத்தில் ராகுல் காந்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கும் அவர் இனிப்புக்களை வழங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Rahul ,birthday , Rahul, Birthday, Prime Minister
× RELATED பிறந்த நாள் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து