சாதி சான்று குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சர், கலெக்டரை முற்றுகை

ஆரணி: ஆரணியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் சாதி சான்று கேட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சர், கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 2,330 மனுக்கள் பெறப்பட்டது. ஆர்டிஓ மைதிலி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 443 மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டன, 1,887 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், ஜமாபந்தி நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். ஆர்டிஓ மைதிலி, தாசில்தார் தியாகராஜன், குடிமை பொருள் தாசில்தார் மணி முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி வரவேற்றார். இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், 436 பயனாளிகளுக்கு ரூ34.80 லட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டா, இருளர் சாதி சான்று, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா முடிந்ததும் அமைச்சர், கலெக்டர் புறப்படும்போது, `ஆரணி விஏகே நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.டி சாதி சான்று வழங்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அமைச்சர் மற்றும் கலெக்டரை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சாதி சான்று வழங்காததால் எங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை என ஆவேசமாக கூறினர். அப்போது அமைச்சர் விசாரணை நடத்தி சாதி சான்று வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்.

Tags : collector , Caste evidence, officers, minister, siege collector
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள...