×

கோவை மாநகர், நாகர்கோவிலில் குடிநீர் விநியோகம் இல்லை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகங்களில் முற்றுகை: 2 எம்எல்ஏ உள்பட 1,240 பேர் கைது

கோவை: கோவை மாநகர், நாகர்கோவிலில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்ககோரி காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகங்களை பொதுமக்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர். இதில், பங்கேற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1240 பேரை போலீசார் கைது செய்தனர். தமிகமெங்கும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு அல்லல்படுகின்றனர். ஆனால், 2 தினங்களுக்கு முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேட்டி அளிக்கையில், `குடிநீர் தட்டுப்பாடு எங்கும் இல்லை’ என்று கூறினார். இந்நிலையில் அவரது சொந்த மாவட்டமான கோவையில் தண்ணீர் பஞ்சத்தை கண்டித்து நேற்று மறியல் நடந்துள்ளது.

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த தவறிய நிர்வாகத்தை கண்டித்து, காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இப்போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். ஆனாலும், தடையை மீறி ஆண்களும், பெண்களுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காலிக்குடங்களுடன் அங்கு திரண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ கார்த்திக், முன்னாள் அமைச்சர்  பொங்கலூர் பழனிசாமி உள்பட 1000 பேைர போலீசார் கைது செய்தனர். அனைவரையும் கோட்டைமேடு  நல்லாயன் திருமண  மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுதலை செய்தனர்.

நாகர்கோவிலில்: நாகர்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட 52 வார்டுகளிலும் 18 நாளாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்னர். இதையடுத்து, நாகர்கோவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வடசேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ உட்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரைவிட்டு வெளியேற முயன்ற மக்கள்: நாகை அருகே திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமருகல், நெய்க்குப்பை, வேலங்குடி, கரம்பை உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 கிராம மக்களும் நேற்று திருமருகலில் ஒன்று கூடினர். குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும் வரை தங்களது ஊர்களில் இருந்து வெளியேறி தண்ணீர் கிடைக்கும் ஊரில் குடியிருக்கு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் அங்கு வந்தார். ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் தண்ணீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : offices ,Coimbatore ,Nagarcoil , In Coimbatore, Nagercoil, drinking water supply, corporation, arrest
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு