×

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை வெப்சைட்டில் வெளியிட வழக்கு

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை வெப்சைட்டில் வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல், சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே தயார் செய்யப்படுகிறது. பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்வதற்கான வழிகள் இல்லை. அதே நேரம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடுகிறது. அது போல உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிட்டால் வாக்காளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் கூறியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது போல் தமிழக தேர்தல் ஆணையம் செய்வதில்லை.  எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு தரப்பில் ‘உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது வெப்சைட்டில் உள்ளாட்சி அமைப்புகள், வார்டு வரையறை தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 16க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Local Election, Website, Case
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...